இன்று கரையை கடக்கும் வாயு புயல் குஜராத்தில் 3 லட்சம் பேர் வெளியேற்றம்

புதன்கிழமை, 12 ஜூன் 2019      இந்தியா
gas storm gujarat 2019 06 12

புது டெல்லி : குஜராத்தை இன்று வாயு புயல் தாக்குவதையடுத்து 9 மாவட்டத்தில் இருந்து சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அரபிக்கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் தீவிரமடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி அந்த புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டு இருந்தது.

இன்று கரையை கடக்கும்

நேற்று காலை நிலவரப்படி வாயு புயல் கோவாவில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மையம் கொண்டு இருந்தது. வாயு புயல் நேற்று  (புதன்கிழமை) மேலும் தீவிரமடைந்து, அது வடக்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மழை

புயல் கரையை கடக்கும் போது 135 கிலோ மீட்டருக்கு மேல் பலத்த சூறைக்காற்று வீசும். இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய பானி புயல் அந்த மாநிலத்தின் 11 மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. அதே போன்று வாயு புயலும் குஜராத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் குஜராத்திற்கு விரைந்துள்ளன. கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அது போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே திரும்பும் படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சுமார் 4 ஆயிரம் மீன் பிடி படகுகள் நேற்று முன்தினம் கரை திரும்பின.

300 கிராமங்கள் பாதிக்க வாய்ப்பு

வாயு புயல் இன்று குஜராத்தை தாக்கும் போது அதன் சீற்றம் காரணமாக கச்சி, கீர், சோம்நாத், போர்பந்தர், அம்ரேலி, ஜூனாகர், பவ்நகர், துவாரகா, ஜக்கம்நகர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள சுமார் 300 கிராமங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து குஜராத் மக்களை வாயு புயல் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கான ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டது.

ஆலோசனை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் நிவாரண முகாம்கள் அமைக்கவும், உதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர புயல் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

3 லட்சம் பேர் வெளியேற்றம்

அதன்படி குஜராத் மாநிலத்தின் 9 மாவட்டத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய குஜராத் அரசு நேற்று காலை அதிரடி நடவடிக்கையை தொடங்கியது. இந்த 3 லட்சம் பேரும் சுமார் ஆயிரம் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு மற்றும் குடி தண்ணீர், மருந்துகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

34 படை வீரர்கள் வருகை

நேற்று இரவுக்குள் 3 லட்சம் பேரையும் வெளியேற்ற போர்கால அடிப்படையில் குஜராத்தில் பணிகள் நடந்து வருகின்றன. மக்களை இடமாற்றம் செய்வதற்காக ஒடிசா அரசிடம் குஜராத் மாநில அரசு ஆலோசனை கேட்டுள்ளது. இன்று குஜராத்தை புயல் தாக்கும் போது பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 45 படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் 34 படை பிரிவினரும் குஜராத்திற்கு வந்துள்ளனர். புயல் வடக்கு நோக்கி நகர்ந்த நிலையில் கேரளா, கோவா, மராட்டிய மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. குஜராத் மாநிலம் காந்திநகரிலும் நேற்று காலை முதல் மழை பெய்தது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து