பத்திரிகை - ஊடகங்களில் தங்கள் சொந்த கருத்துகளை அ.தி.மு.க. சார்பில் தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - தலைமை கழகம் எச்சரிக்கை

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
ADMK head meet 2019 06 12

சென்னை : எந்தவொரு விவகாரத்திலும் கட்சியின் நிலைப்பாடு குறி்த்து நிர்வாகிகளின் ஒப்புதலை பெற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களுக்கு அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பத்திரிகை - ஊடகங்களில் தங்கள் சொந்த கருத்துகளை  அ.தி.மு.க.வின் கருத்தாக தெரிவிக்கும் தனி நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதலை பெற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசியல் பணிகள்

அ.தி.மு.க. சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதையும், கட்சியின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துக்களை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனுமதிக்க வேண்டாம்...

மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை அ.தி.மு.க. கருத்துக்களாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க. சார்பிலோ அல்லது கழக ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அ.தி.மு.க.-வின் பிரதிநிதிகளைப் போல சித்தரித்து, அவர்களை கட்சியின் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று மீண்டும் அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒழுங்கும் - கட்டுப்பாடும்...

அத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறை கொண்டு போய் சேர்த்து விடும் என்பதை மனதில் கொண்டு ஊடகம் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அ.தி.மு.க. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம். ஒழுங்கும், கட்டுப்பாடும் இந்த இயக்கத்தின் இரு கண்களாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அனைவரும் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து