கிரிக்கெட் வீரர்களில் சாதனை - கடந்த ஆண்டு கோலியின் வருமானம் ரூ.173 கோடி !

புதன்கிழமை, 12 ஜூன் 2019      விளையாட்டு
virat kohli 2019 06 12

புதுடெல்லி : உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

3 நிலைகளிலும்...

இந்திய அணிக்கு 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. தனது அதிரடியான ஆட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்து உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அபாரமான ஆட்டம் மூலம் கோலி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றன.

ரூ.173.48 கோடி...

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ‘‘போர் பஸ்’’ வெளியிட்டுள்ளது. 100 கொண்ட இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டில் ரூ.173.48 கோடி சம்பாதித்து உள்ளார். இதில் விளம்பரம் மூலம் மட்டும் அவர் கடந்த ஆண்டில் ரூ.145 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். மீதி உள்ள தொகையை அவர் விளையாட்டு மூலம் சம்பாதித்து உள்ளார்.

முதலிடத்தில்...

குத்துச்சண்டை வீரர் மேவெதர் ரூ.881 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த படியாக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச் சுக்கல்) ரூ.756 கோடி சம்பாதித்து 2-வது இடத்திலும், மற்றொரு கால்பந்து வீரர் நெய்மர் (பிரேசில்) ரூ.728 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து