முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுரவம் பார்க்காமல் டாக்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு மம்தா தீர்வு காண வேண்டும் - மத்திய அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கவுரவம் பார்க்காமல் டாக்டர்கள் வேலைநிறுத்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அங்கு அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்றபோது, தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி டாக்டர்கள் கோஷம் எழுப்பியதால் அவர் கோபமடைந்தார்.

இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். இதனால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் சங்கத்தினர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை சந்தித்து, மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து அவர் கூறுகையில்," இவ்விவகாரத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கவுரவ பிரச்சனையாக பார்க்காமல் விரைவில் தீர்வுகாண வேண்டும். அவர் மருத்துவர்களை எச்சரித்ததால் தான் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து மம்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் அவரிடம் இவ்விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து