முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தீவிரம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில் : தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மணவாளக்குறிச்சி, பொற்றையடி ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.   

தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் உருவான வாயு புயலின் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்க்காற்று வீசியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும், பாசன குளங்களிலும் தண்ணீர் பெருகத் தொடங்கியது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பூதப்பாண்டி, தெரிசனங் கோப்பு, சுசீந்திரம், இறச்ச குளம், மணவாளக்குறிச்சி, பொற்றையடி பகுதிகளில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒருசில பகுதிகளில் வயல் நடவுப்பணி நடந்து உள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள் தங்குதடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 6 ஆயிரத்து 500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவிலில் நேற்று காலையில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் நேற்று  காலை 11 அடியை எட்டியது. அணைக்கு 262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.45 அடியாக இருந்தது. அணைக்கு 155 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் 1,500 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தால் பாசனத்திற்காக அணைகள் திறக்கப்படும். தற்போது 1,300 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

மழை நீடித்து வருவதால் விரைவில் அணை திறப்பதற்கான போதுமான தண்ணீர் வந்து விடும். அடுத்த வாரத்தில் அணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து