முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1996-ம் ஆண்டு இந்தியா vs பாக். போட்டி: உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை !

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு :

எதிர்பார்ப்பு...

உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இதுவாகும். இந்தப் போட்டிக்கு இந்திய ரசிகர் மட்டுமில்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 1996ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி குறித்து சற்று திரும்பி பார்க்கலாம்.

வாசிம் அக்ரம்...

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரில் மோதின. இந்தப் போட்டியில் இந்தியாவிற்கு முகமது அசாரூதின் கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக அமீர் சோஹேல் இருந்தார். கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியின் உலகக் கோப்பை கேப்டனாக இருந்த வாசிம் அக்ரம் இந்தப் போட்டியிலிருந்து விலகினார். எனவே இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே சர்ச்சை ஆரம்பித்தது.

சித்து - ஜடேஜா...

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அஜய் ஜடஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. நவ்ஜோத் சிங் சித்து 115 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அஜய் ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் வாகார் யூனிஸ் மற்றும் முஷ்டாக் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

சிறப்பான தொடக்கம்....

இதனையடுத்து 288 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சையித் அன்வர் மற்றும் அமீர் சோஹேல் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் எடுத்தனர். சையித் அன்வர் 38 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் தனது அதிரடியை தொடர்ந்த அமீர் சோஹேல் இந்திய பந்துவீச்சை நொறுக்கினார்.

பரப்பரப்பான போட்டி...

இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளார் வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துவீச்சை அமீர் சோஹேல் அடித்து துவம்சம் செய்தார். அவ்வாறு வெங்கடேஷ் பிரசாத் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விளாசிய அமீர் சோஹேல் வெங்கடேஷ் பிரசாத்தை பார்த்து பேட்டை காட்டி, “போய் அந்தப் பந்தை எடுத்துவா” என்று கூறினார். இதனையடுத்து இந்தப் போட்டியில் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அமீர் சோஹேல் இடையே பரப்பரப்பான போட்டி நிலவு தொடங்கியது.

கிளீன் போல்ட்...

அதன்பின்னர் வெங்கடேஷ் பிரசாத் வீசிய அடுத்த பந்தில் அமீர் சோஹேல் மீண்டும் பவுண்டரி அடிக்க முற்பட்டார். எனினும் அவரின் முயற்சி பலன் அளிக்காமல் அவர் கிளீன் போல்ட் ஆனார். சோஹேலின் விக்கெட்டை வீழ்த்திய வெங்கடேஷ் பிரசாத் சோஹேலை பார்த்து, “போ உன் வீட்டிற்கு போ” என்று கூறி வழி அனுப்பிவைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய போட்டியில் வெங்கடேஷ் பிரசாத் வெற்றிப் பெற்றார்.

இந்தியாவிடம் தோல்வி...

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் மட்டும் எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் தாமதமாக பந்துவீசியதால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் தோற்றது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் ஜாவித் மியாண்டாட், “அமீர் சோஹேல் தனது கோபத்தை கட்டுபடுத்தி சிறப்பாக விளையாடியிருந்தால் பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியை வென்று இருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து