தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      விளையாட்டு
kohli nervous out 2019 06 17

மான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு வெளியேறினார்.

இந்தியா வெற்றி...

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஏதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.  முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உள்பட 140 ரன்களை விளாசினார். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லுவிஸ் முறைபடி இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெளியேறினார்...

அப்போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து சதத்தினை நெருங்கி கொண்டிருந்தார். அப்போது 48 வது ஓவரினை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வீசினார். அதனை எதிர்கொண்ட விராட் கோலி பவுன்சர் பந்தினை சுழற்றி அடிக்க முற்பட்டபோது அது பேட்டில் படாமல் கீப்பரின் கைக்கு சென்றது. ஆனால் கோலி பந்து பேட்டில் உராய்ந்து விட்டதாக நினைத்து உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் போட்டி நடுவர் கோலிக்கு அவுட் கொடுக்கவில்லை. மேலும் கோலி களத்தை விட்டு சென்ற பின்னர், அவர் அவுட் ஆனதாக கருதப்பட்ட பந்து வீச்சின் வீடியோவினை மறு ஆய்வு செய்த போது பேட்டிற்கும், கடந்து சென்ற பந்திற்கும் பெரிய இடைவெளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நொந்து போனார்...

மைதானத்திலிருந்து வெளியேறி தனது அறைக்கு சென்ற விராட் கோலி, அவசரப்பட்டு தான் செய்த தவறை நினைத்து மிகவும் நொந்து போனார். ஆனால் கோலி பேட்டினை சுழற்றியபோது, அதில் சில முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர் பந்து தான் பேட்டில் பட்டுவிட்டதாக நினைத்து களத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என போட்டி வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியாயினும்,பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் நாடு முழுவதும் இந்த வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.

7 புள்ளிகளுடன்...

இந்த வெற்றியின் காரணமாக, 2019 உலகக்கோப்பை போட்டியில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று (தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்) வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு ஏதிரான போட்டி மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் ஏழு புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து