முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பாராளுமன்ற மக்களவையில் நேற்று 2-வது நாளாக எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவியேற்றார். அவரது தலைமையிலான மந்திரி சபை கடந்த 30-ம் தேதி பதவியேற்றது. தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக 17-வது பாராளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றார். அவர் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட 313 எம்.பி.க்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். 

நேற்று 2-வது நாளாக புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சந்தோஷ் பாண்டே முதல் நபராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். முதல் முறை எம்.பி.யான சன்னி தியோல் ஆங்கிலத்தில் பதவியேற்றார். அதை தொடர்ந்து புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவியேற்றார். பின்னர் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். 

கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு, (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டாக்டர் செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), செந்தில்குமார் (தர்மபுரி), விஷ்ணுபிரசாத் (ஆரணி), ரவிக்குமார் (விழுப்புரம்), ஆ.ராசா (நீலகிரி), திருமாவளவன் (சிதம்பரம்), திருநாவுக்கரசர் (திருச்சி), கனிமொழி (தூத்துக்குடி), பாரிவேந்தர் (பெரம்பலூர்), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (ராமநாதபுரம்) உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பதவி ஏற்ற பிறகு அவர்கள் அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

நேற்றுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைகிறது. புதிய சபாநாயகர் தேர்வு இன்று நடக்கிறது. 20-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 5-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஜூலை 26-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து