முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை 30-வது லீக்: தென்ஆப்பிரிக்காவை வெளியேற்றியது பாக்.

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லார்ட்ஸ் : பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, அரை இறுதி வாய்ப்பை இழந்து தென்னாப்பிரிக்க அணி வெளியேறியது.

30-வது லீக்...

உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மூத்த வீரர் சோயிப் மாலிக், வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹரிஸ் சோஹைல், ஷகீன் அப்ரிதி சேர்க்கப்பட்டனர்.

சோஹைல் அதிரடி...

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் அக் மற்றும் பஹார் ஜமான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இமாம் 44 மற்றும் ஜமான் 44 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர், வந்த பாபர் அஸாம் தனது பாணியில் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முகமது ஹஃபீஸ் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாபர் 69 ரன்களில் அவுட் ஆக, மறுபுறம் ஹரிஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 300 ரன்களை கடந்தது.

308 ரன்கள் குவிப்பு...

இறுதி ஓவர் வரை பேட்டிங் செய்த அவர் 49.5வது ஓவரில், 59 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

ஆரம்பமே அதிர்ச்சி...

பின்னர் 309 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஆம்லா, 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டு பிளஸ்சியும், தொடக்க வீரர் டி காக்கும், 2-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். டி காக் 47 ரன்களிலும், டூ பிளஸ்சி 63 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

259 ரன்கள் மட்டும்...

பெலுக்வயா மட்டும் கொஞ்சம் தாக்குப்பிடித்து 46 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன்...

பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ், ஷதாப் கான் தலா 3 விக்கெட்களையும் முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

தாண்டியதில்லை...

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.  தென்னாப்பிரிக்க அணி, உலகக் கோப்பை தொடரில் ஒரு அரையிறுதியை கூட தாண்டியதில்லை என்பது ஒரு வரலாற்று சோகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து