முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.காவனூர் கிராமத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும், தெற்குத்தரவை ஊராட்சிக்குட்பட்ட வைரவன்கோவில் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணறு உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ததோடு கிராமப் பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் வழங்கிட ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள் உட்பட 2,306 குக்கிராமங்கள் உள்ளன.  தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக 79.4 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. 
 அதன்படி, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 35 மில்லியன் லிட்டர் அளவிலும், உள்ளாட்சித் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் போன்ற குடிநீர் ஆதாரங்கள் மூலமாக சராசரியாக 38 மில்லியன் லிட்டர் அளவிலும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக, மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் சாயல்குடி பேரூராட்சி தவிர்த்து மீதமுள்ள 6 பேரூராட்சி பகுதிகளில் தினந்தோறும் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சாயல்குடி பேரூராட்சி பகுதியில் 1 நாள் இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 
அதேபோல, ஊரகப் பகுதிகளில் 1,295 குக்கிராமங்களுக்கு தினந்தோறும் என்ற அடிப்படையிலும், 788 குக்கிராமங்களுக்கு 1 நாள் இடைவெளியிலும், 223 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.13.82 கோடி மதிப்பில் 377 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதுதவிர, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் வழங்கிட இயலாத நிலையில் உள்ள கிராமங்கள் மற்றும் உள்@ர் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த இயலாத நிலையில் உள்ள கிராமங்கள் என்ற அடிப்படையில் 45 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 மேலும், குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் குறைகளை தெரிவித்திட ஏதுவாக 1800 425 7040 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் இதுவரை 82 புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதுதவிர, குடிநீர் விநியோகம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மண்டல அளவில் துணை ஆட்சியர்ஃஉதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  அதேபோல, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக குடிநீர் விநியோகம் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மற்றும் செய்திகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர் (காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்) டி.எம்.ஜவகர் கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எ.பாண்டி, பா.இராமமூர்த்தி, உதவி பொறியாளர் ஹேமா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து