சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க காஞ்சி மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை, ரூ.1,689 கோடி மதிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இரண்டு இடங்களில்...

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியைப் போக்கும் வகையில் கடந்த 2003-2004-ம் ஆண்டில் தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி என இரண்டு இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்தக் குடிநீர்த் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்தன.

மேலும் ஒரு நிலையம்...

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டன. எனவே, சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில், நெம்மேலியில் மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் கொள்திறன் 15 கோடி லிட்டர் (150 மில்லியன் லிட்டர்) ஆகும். இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1,689 கோடி ஆகும். நெம்மேலியில் ஏற்கெனவே உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் காலி நிலத்தில், மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்.

முதல்வர் துவக்குகிறார்....

தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் இந்த நிலையத்திற்கு இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என். ஹரிஹரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீரு் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து