முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை-கன்னியாகுமரி இடையே இரட்டைஅகல ரயில் பாதை திட்டப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் தொழில் வர்த்தக சங்கம் மத்திய அமைச்சரிடம் மனு

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை - கன்னியாகுமரி இடையேயான இரட்டை அகல ரயில் பாதை திட்டப் பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் செல்வம்,  முதுநிலை தலைவர் இரத்தினவேல் மற்றும் மதுரை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராம் பாபு ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் டெல்லியில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
அதில், மதுரை-கன்னியாகுமரி இரட்டை அகல ரயில்பாதைத் திட்டப் பணிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் மதுரை -கன்னியாகுமரி இடையே திட்டப் பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வெறும் அறிவிப்போடு திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்திட்டம் முழுமையாக விரைவில் நிறைவேற்றப்பட்டால்தான் தென் தமிழக மக்களுக்கு திட்டத்தின் பயன்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறும். எனவே மதுரை-கன்னியாகுமரி பிரிவில் திட்டப் பணிகள் மேலும் காலதாமதமின்றி துவங்கப்படவும் விரைவில் நிறைவேறவும் 2019-2020 ரயில்வே பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
2009-2010-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் ரூ. 150 கோடி மதிப்பீட்டுடன் அறிவிக்கப்பட்டு மீட்டர் கேஜ் பாதை மூடப்பட்டது. மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக 20 சதவீத திட்டப் பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 240 கோடி அளவிற்கு வேளாண் உற்பத்திப் பொருட்களும் பிற சரக்குகளும் இப்பகுதிகளில் இருந்தும் பிற பகுதிகளுக்கும் சாலைப் போக்குவரத்து மூலம் அனுப்பப்படுகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்போக்குவரத்தில் பெரும் பகுதி ரயில் மூலம் நடைபெறும். திண்டுக்கல்-கோட்டயம் இடையே தேனி, போடிநாயக்கனூர், கம்பம், குமுளி வழியாக அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும். திண்டுக்கல்-கோட்டயம் இடையே தேனி-போடிநாயக்கனூர்-கம்பம்-குமுளி வழியாக ரூ. 473.89 கோடி மதிப்பீட்டில் 123 கி.மீ நீளம் உள்ள அகல ரயில்பாதை அமைக்கும்  திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுவதின் மூலம் நாட்டின் இரு முக்கிய துறைமுக நகரங்களான தூத்துக்குடிக்கும் மற்றும் கொச்சிக்கும் இடையே நேரடியான ரயில் தொடர்பு ஏற்படும். தமிழகத்திற்கும் குறிப்பாக தென் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே சரக்குப் போக்குவரத்து அதிகரித்து தொழில் வணிகம் பெருகும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
எனவே 2019-2020-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் அவை நிறைவேறிடச் செய்திட வேண்டும். மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய அகல இரயில்பாதைத் திட்டப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 2011-2012-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்புதிய ரயில்பாதை அமைக்கப்படுவது சென்னை-மதுரை-தூத்துக்குடி வழித்தடத்தில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு நிறைய சரக்கு ரயில்கள் செல்வதற்கும், தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் பின் தங்கி உள்ள அருப்புக்கோட்டை பகுதிகளில் தொழில் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறவும் பெரிதும் உதவும். திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை தென்னக ரயில்வே சமர்ப்பித்து விட்டது. எனவே 2019-2020-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் விரைவாக துவங்கி நிறைவு பெறச் செய்திட வேண்டும்.
மதுரைக்கும், பெங்களூருவிற்கும் இடையே பகல் நேர விரைவு இரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தற்போது தூத்துக்குடிக்கும், மைசூருக்கும் இடையே மதுரை மற்றும் பெங்களூரு வழியாக ஓடிக் கொண்டிருக்கும் விரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் - மதுரை - பெங்களூரு ரயிலில் பயணிகள் போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. எனவே மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையே பகல் நேர விரைவு ரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.  தற்போது நேரடியாக மதுரையிலிருந்து சென்னைக்கு காலையில் வைகை விரைவு ரயில், இரவில் பாண்டியன் விரைவு இரயில் ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் மதுரைப் பயணிகளுக்கு இடம் கிடைப்பதும் முன் பதிவு பெறுவதும் மிகவும் சிரமமாக இருக்கிறது. தென் மாவட்டஙகளில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் பிற ரயில்களில் குறைந்த அளவே மதுரைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. எனவே சென்னை-மதுரை இடையே இரட்டை அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றியவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
கொல்லம் - மதுரை விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். மானாமதுரை - பரமக்குடி, ராமேஸ்வரம், ராமேஸ்வரம் பகுதிகளில் உள்ள பயணிகள் நலன் கருதி கொல்லம் - மதுரை விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தென் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பயணிகள் நலன் கருதி ஜோத்பூர் - அகமதாபாத்-சென்னை, பீகானீர்-கோயம்புத்தூர், திருச்சி-மங்களூர் ஆகிய விரைவு ரயில்களை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து