முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் நீரில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றின் கரை வழியே சென்ற தந்தையும், மகளும் ஆற்றின் நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் - சல்வடார் நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ், பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார். இதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.சர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறி விடலாம் என எண்ணினர். அதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார். இதனால் பயந்து போன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளை காப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார். அப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கின. இதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து