முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து: அரையிறுதிக்கு அர்ஜென்டினா, சிலி அணிகள் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

ரியோடிஜெனீரோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, சிலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் காலை நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. லீக் சுற்று ஆட்டங்களில் சொதப்பிய அர்ஜென்டினா அணி இந்த ஆட்டத்தில் எழுச்சியுடன் ஆடியது. 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினெஸ், சக வீரர் செர்ஜி அகுரோ கடத்தி கொடுத்த பந்தை கோலாக்கினார். 74-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஜியோவானி லோ செல்சோ இந்த கோலை அடித்தார். வெனிசுலா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய நேரப்படி 3-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, பிரேசிலை சந்திக்கிறது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலி அணி, கொலம்பியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் மற்றும் கூடுதல் நேரம் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலை (0-0) வகித்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் 4 பெனால்டி வாய்ப்புகளை கோலாக்கினார்கள். பரபரப்பான சூழ்நிலையில் கொலம்பியா அணியின் 5-வது மற்றும் கடைசி பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் வில்லியம் டெசில்லோ கோலாக்க தவறினார். சிலி அணியின் கடைசி பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அலெக்சிஸ் சாஞ்சஸ் கோலாக்கி அணிக்கு திரில் வெற்றியை தேடி கொடுத்தார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் சிலி அணி 5-4 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து