திண்டுக்கல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மதுரை வாலிபர்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      திண்டுக்கல்
30 dglmdu

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மதுரை வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் முட்புதரில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொடைரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். தண்டவாளத்தில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடலை வெளியே கொண்டு வந்தனர். சற்று தூரம் தள்ளி ஒரு செல்போன் மற்றும் ஓட்டுனர் உரிமம், ஏ.டி.எம்.கார்டு ஆகியவையும் கிடந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த விருமாண்டி மகன் அன்பரசன்(30) என தெரியவந்தது. போலீசார் விருமாண்டியை வரவழைத்து விசாரித்ததில் இறந்தது தன் மகன் தான் என அடையாளம் காட்டினார்.
கடந்த 4 ஆண்டுகளாக அன்பரசன் நிலக்கோட்டையில் உள்ள தனது அக்கா காசியம்மாள் என்ற காயத்திரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.  காசியம்மாள் நடத்தி வந்த பள்ளியை மேற்பார்வை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 26ம் தேதியில் மதுரைக்கு செல்வதாக தனது அக்காவிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் கூறிச்சென்ற அன்பரசன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தான் அம்மையநாயக்கனூர் ரெயில்வே தண்டவாளம் முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அன்பரசனின் உடலில் பல பாகங்கள் சிதைந்தும் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. எனவே அவர் ரெயிலில் அடிபட்டு
இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கி வீசிச் சென்றார்களா? என்று தெரியவில்லை.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து