முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க.வில் இருந்து விலகி வரும் 6-ம் தேதி அ.தி.மு.க.வில் இணைகிறார் இசக்கி சுப்பையா

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தென்காசி : அ.ம.மு.க.வில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா வரும் 6-ம் தேதி அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என்றும், அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலக உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் தென்காசியில் இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தினால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. நான் குறைந்த காலமே அமைச்சராக இருந்ததாக என்னை கிண்டல் அடித்துள்ளார். என்னை அடையாளம் காட்டியதாக அவர் கூறுகிறார். அ.தி.மு.க.வில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல. என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை. இது ஒரு தலைவருக்கு அழகல்ல. எனவே அ.ம.மு.க.வில் இருந்து நானும், எனது ஆதரவாளர்களும் விலகுகிறோம்.

மக்களின் முதல்வராக, தொண்டர்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னுடன் இருந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அ.தி.மு.க.வில் இணைகிறேன். வரும் 6-ம் தேதி தென்காசியில் நடைபெற உள்ள விழாவில், 20 ஆயிரம் பேருடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் அமமுகவில் இருந்து ஏற்கனவே விலகிய நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவும் விலகி உள்ளார். தினகரனிடம் நெருக்கமாக இருந்த இசக்கி சுப்பையா, பாராளுமன்றத் தேர்தலின்போது அ.ம.மு.க. சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து