பெரியகுளம் அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ் வழங்கு வாய்க்காலை சீரமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தேனி
4 theni news

தேனி - தேனி மாவட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில்  வழங்கு வாய்க்காலை 90 இலட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவிபல்தேவ், பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,  தமிழக அரசு தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்திற்குட்பட்ட மேல்மங்கலம் வழங்கு வாய்க்கால் 5850 மீட்டர் தூர்வாரும் பணியும், வாய்க்காலின் இருபுறமும் 1000 மீ நீளத்திற்கு சிமிண்ட் பூசும் பணி, சைபன் எல்.எஸ் 3780 மீட்டரில் மறு கட்டுமானப்பணிகள் சிறுபாலங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அணைக்கட்டு வழங்கு வாய்க்காலின் மூலம் நேரடியாக 298.79 ஹெக்டர் விவசாய நிலங்களும், மறைமுகமாக 15.10 ஹெக்டர் நிலங்களும் என மொத்தம் 313.89 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இப்பணிகளின் மூலம் சைபனில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், இவ்வாய்க்காலின் மூலம் கீழ்நிலை கண்மாய்களான நாரணன்குளம் மற்றும் சிறுகுளம் கண்மாய்களுக்கு தங்கு தடையின்றி நீர் செல்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மேல்மங்கலம் பதிவு பெற்ற விவசாய சங்க உறுப்பினர்களிடம் இப்பணி தன்மை குறித்தும், குடிமராமத்து திட்டப்பணிகளை சிறப்பான முறையில் பணிகள் மேற்கொள்ளுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரஅமைப்பு செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநில கோட்டம்) குமார், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் கோகுலகண்ணன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து