முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் பேராவூரணியில் ரூ. 25 கோடி மதிப்பில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்: 110 விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் நிறுவப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் . எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனடியாக அரவை செய்திட ஏதுவாக, கூடுதலாக நவீன அரிசி ஆலைகளை நிறுவிட வேண்டியது அவசியமாகிறது. எனவே, உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரங்களை கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் நிறுவப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பயன்பாட்டில் உள்ள சொந்தக் கிடங்குகளின் கொள்ளளவினை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் உணவு தானியங்களை இருப்பு வைப்பதற்கான தேவையினை கருத்தில் கொண்டும், கூடுதலாக 36,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 கிடங்குகள் பல்வேறு இடங்களில் 59.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கல்நார் மேற்கூரைகளுடன் இயங்கி வரும் 55 கிடங்குகளில், மேற்கூரைகளை அகற்றி விட்டு, நவீன மேற்கூரை அமைப்புடன், வண்ணம் தீட்டப்பட்ட ஸ்திர தன்மை அதிகம் கொண்ட துருப்பிடிக்காத மேற்கூரை அமைக்கும் பணி 21.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கிவரும் கிடங்குகளின் வளாகத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளுக்கு பதிலாக நீண்ட நாள் பயன்படுத்தும் வகையிலும், மழைக் காலங்களில் சேதமடையாத வகையிலும், 54.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் நடப்பு நிதியாண்டில் அமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் மூலம் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள், பூக்கள் மற்றும் இதர விவசாய பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்திட 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய மின் சக்தியுடன் இயங்கக் கூடிய குளிர்சாதனக் கிடங்கு, நடப்பு நிதியாண்டில் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து