முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா எதிரொலி: கர்நாடகத்தில் காங். - ம.ஜ.த. கூட்டணி ஆட்சி கவிழ்கிறது? அவசரமாக பெங்களூர் திரும்பினார் குமாரசாமி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததன் எதிரொலியாக கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அவசரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து பெங்களூர் திரும்பினார் அம்மாநில முதல்வர் குமாரசாமி.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  225 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆளும் தரப்புக்கு 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் அமைச்சர் பதவி கிடைக்காமல் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங்  ஆகியோர் தங்களது  பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இல்லாத நிலையில் அவரது செயலாளரிடம் 12 பேரும் நேற்று முன்தினம்  கொடுத்தனர். அதன்பின், அந்த 12 பேரும் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வாஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று அங்குள்ள சோபிடெல் ஓட்டலில் தங்கியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி காங்கிரஸ் - மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால்  ஆளும் கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் குறைந்து விடும். பா.ஜ.க. 105 இடங்கள் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கும், பா.ஜ.க.வுக்கும் சமபலம் உருவாகும். தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கலாம்.

வரும் 12-ம் தேதி கர்நாடக சட்டசபை கூடும் நிலையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனிடையே தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடக முதல்வர் குமாரசாமி பெங்களூருக்கு திரும்பினார். மேலும்ஆட்சி கவிழும் முன்பே, அனுதாபத்தைப் பெற அவர் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான சிவகுமார் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து