அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி கிரிக்கெட் விநாயகருக்கு சென்னையில் மவுசு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      விளையாட்டு
vinayakar demand 2019 07 07

சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பிரார்த்தனை, ஒரு கிரிக்கெட் விநாயகர் உருவாக்கும் அளவிற்கு சென்றுள்ளது சென்னை மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சென்னை, அண்ணா நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கே.ஆர்.ராமகிருஷ்ணன். இவர் தான், பாளையத்தம்மன் கோவிலில் இந்த கிரிக்கெட் விநாயகரை அமைத்தவர். இவர் கடந்தாண்டு குடியிருப்பு முன்பு விநாயகர் கோவில் அமைக்க ஏற்பாடு செய்த போது,. இந்தியா - ஆஸ்திரேலியா(2001) டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. தீவிர கிரிக்கெட் ரசிகரான ராமகிருஷ்ணன், போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தான் அமைக்க உள்ள விநாயகருக்கு கிரிக்கெட் விநாயகர் என்றே பெயர் வைப்பதாக வேண்டிக் கொண்டுள்ளார். வேண்டுதல் பலித்து இந்தியா வென்று விட்டதால் கிரிக்கெட் விநாயகர் என்றே பெயரும் வைத்து விட்டார்.

இது மட்டுமின்றி, இந்த கிரிக்கெட் விநாயகருக்காக, சிக்சர் அடிப்போனே போற்றி, ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி, ஓம் விக்கெட் கீப்பராய நமஹ என்ற பாணியில் 108 மந்திரங்களையும் ராமகிருஷ்ணன் எழுதி வைத்துள்ளாராம். இந்தியா விளையாடும் போட்டிகள் என்றாலே, இந்த கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும் உண்டாம்.
இங்குள்ள விநாயகர், விநோத வடிவில் 11 தலைகள், ஒரு கையில் பேட், இன்னொரு கையில் பந்து, கால்களில் பேடுகள், கையுறைகள் என்று காட்சி தருகிறார். அதேபோல பவுலிங், கீப்பிங், பீல்டிங் விநாயகர்களும் உண்டு. இந்த சிலைகள் அனைத்தும் பிரத்யேகமாக மாமல்லபுரத்தில் ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டதாம். பின்னர், கிழக்கு அண்ணாநகர் அன்னை சத்யா நகரில், புது ஆவடி சாலை பாளையத்தம்மன் கோவிலில் ஆலய நிர்வாகத்தின் அனுமதியுடன் கிரிக்கெட் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

தற்போது, இங்கிலாந்து நாட்டில், உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய அணியும் லீக் சுற்றில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால், இந்த கிரிக்கெட் விநாயகருக்கு மவுசு கூடியிருப்பதாக குறிப்பிடும் ராமகிருஷ்ணன், கோப்பை வெல்வதற்கு சிறப்பு பூஜைகள் நடக்கும், என்கிறார். ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் ஒன் பவுலர், ரோகித்சர்மா, விராத் கோஹ்லி போன்ற சிறந்த வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி இருப்பதால், இந்தமுறை சந்தேகமே இல்லாமல் இந்தியாவுக்குத் தான் உலகக் கோப்பை என்று ராமகிருஷ்ணன் அடித்துச் சொல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து