கிராமத்து இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்க 64 கோடியே 35 லட்சத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் - ஊராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் அம்மாவின் அரசால், நடப்பு ஆண்டில், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில்  64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள், ஊரகப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையால் நடத்தப்படும்.வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும். ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஆண்டு முழுவதும் விளையாட்டு சாதனங்கள் வழங்கவும், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைக்கவும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கவும் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அவற்றின் தொடர் செலவினத்திற்காக மாநில அரசின் நிதியிலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் மேற்கொள்ளப்படும். அனைத்து முக்கியமான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.

சென்னை நேரு பூங்கா அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பழைய தலைமை அலுவலகக் கட்டிடத்தை இடித்து விட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழக வளாகத்தில் 12 ஆசிரியர் குடியிருப்புகள் 3.5 கோடி ரூபாய் செலவில் கட்டித் தரப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து