ஷார்ஜாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற இந்திய தொழிலதிபர்

புதன்கிழமை, 10 ஜூலை 2019      உலகம்
indian businessmen resident sharjah 2019 07 10

துபாய் : ஷார்ஜாவின் நிரந்தர குடியுரிமை பெற்ற முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையை இந்திய தொழிலதிபர் லாலோ சாமுவேல் பெற்றுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன் கார்டு போன்று கோல்டன் கார்டு என்ற நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 கோடி திர்ஹாமுக்கும் அதிகமாக முதலீடு செய்த 6,800 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மருத்துவம், பொறியியல், அறிவியல் மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிளாஸ்டிக், மெட்டல் உற்பத்தி நிறுவனங்களின் தலைவரும் இந்திய தொழிலதிபருமான லாலோ சாமுவேலுக்கு ஷார்ஜாவில் நிரந்தர குடியுரிமைக்கான கோல்டன் கார்டு வழங்கப்பட்டது. ஷார்ஜா வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிகேடியர் ஆரிப் அல் ஷாம்சி அவருக்கு கோல்டன் கார்டு வழங்கினார். லாலோ சாமுவேல், அரபு நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற 100 தொழிலதிபர்களில் முதன்மையானவராக கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அரபு நாடுகளில் ஏறக்குறைய ரூ.1.86 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த மலபார் ஜூவல்லரி குரூப் இணைத் தலைவர் இப்ரகிம் ஹாஜிக்கு கோல்டன் கார்டு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து