காங்கிரசை அழிக்க முயற்சி நடப்பதாக கூறி பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      இந்தியா
sonia-rahul protest parley campus 2019 07 11

புது டெல்லி : கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரசை அழிக்க முயற்சிகள் நடப்பதாக கூறி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் நடந்து வரும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் திடீரென பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதற்கிடையே கர்நாடகா - கோவா மாநிலங்களில் காங்கிரசை அழிக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் நேற்று பெங்களூரிலும், டெல்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா - ராகுல் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், ஜனநாயகத்தை காப்பாற்று என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர். சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து