ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவு அதிகாரி மீது வழக்குப்பதிவு - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் நடவடிக்கை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      இந்தியா
Jagan Mohan 2019 06 19

அமராவதி : ஆந்திராவில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்பு பிரிவு அதிகாரி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தின் போது, அவரது வீட்டின் அருகே ரூ. 5 கோடி செலவில் பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை எனக் கூறி அதனை இடிக்க உத்தரவிட்டார். இதன்படி கட்டிடமும் தரைமட்டமாக இடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பணமோசடி வழக்குகளை விசாரித்த சீனிவாச காந்திக்கு எதிராக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். காந்தி, தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு அமலாக்கத்துறை உதவி இயக்குநராக இருந்த சீனிவாச காந்தி, சோதனை என்கிற பெயரில் தன்னை வேட்டையாடுவதாக ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியிடம் புகார் கூறினார்.  இதில் தெலுங்கு தேசம் கட்சியின் உதவியோடு தங்கள் குடும்பத்தினர் மீதும், தன் மீதும் அமலாக்கத்துறை ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது எனவும், பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சீனிவாச காந்திக்கு சொந்தமான இடங்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதன்படி ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 3 கோடி 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சீனிவாச காந்தி, அவரது மனைவி, மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து