ஆந்திர சட்டசபையில் சந்திரபாபுவின் சவாலுக்கு முதல்வர் ஜெகன் ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      இந்தியா
Jagan Mohan 2019 06 19

ஆந்திர மாநில சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விட்ட சவாலுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றது முதலே, துணிச்சலான மற்றும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார்.

இந்நிலையில் சட்டசபையில் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் குறைகள் தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவறாக கூறியுள்ளார் என உரிமை மீறல் தீர்மான நோட்டீசை கொண்டு வந்தனர். பின்னர் சந்திரபாபு நாயுடு இந்த தீர்மானத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி சரியான விளக்கம் அளித்தால் தான் பதவி விலகத் தயார் என கூறினார். இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்த போது தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஓங்கி குரல் கொடுத்தார். சற்று நேரம் சட்டசபை அமளியானது. அதன்பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-

மோசமான பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட முந்தைய சந்திரபாபு அரசு நிதியாக வழங்கவில்லை. பயிர்களுக்கான விதைகளை கொள்முதல் கூட செய்யவில்லை. இது மிகவும் மோசமான சூழல். நவம்பர் மாதத்தில் விதை கொள்முதல் செய்யத் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிக்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்ற போது அந்த விதைகள் விற்பனைக்கே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய அரசின் அலட்சியத்தால் 50 குவிண்டால் அளவுதான் விதைகள் இருக்கின்றன. மேலும் முந்தைய அரசு தரவேண்டிய உள்நாட்டு மானியமான ரூ. 2000 கோடியை நாங்கள் விரைவில் வழங்குவோம். முந்தைய அரசு பண்ணை கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி தள்ளுபடி ஆகியவை குறித்து சிந்திக்க கூட இல்லை. அன்றைய தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியில் ரூ. 87,612 கோடி தள்ளுபடி செய்வதாக கூறினார். அதையும் செய்யவில்லை. பண்ணை குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சொன்னபடி விரைவில் தீர்வு காணப்படும். கடன்களை முறையாக திருப்பிக் கட்டிவரும் விவசாயிகளின் வட்டி நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் இப்போது அளித்த 9 மணி நேரம் இலவசமாக மின்சாரம் வழங்கியுள்ளோம். இதற்காக ரூ.1700 கோடி செலவிடுகிறோம். மாநிலத்தில் 60 சதவீத விவசாயிகளுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. அடுத்த ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள 40 சதவீத விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு விடும். இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விலை உறுதிப்படுத்தும் நிதியாக விவசாயிகளுக்கு ரூ. 3000 கோடி வழங்க உள்ளது. எண்ணெய் பனை விவசாயிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்க உள்ளோம். இதனால் 1.1 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். மேலும் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிதியாக வழங்கப்படும். இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து