முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதித்துறை, பத்திரிகை துறை சுதந்திரமாக செயல்படுகிறது: நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதை உறுதியாக கடைப்பிடிக்கும் மாநிலம் தமிழகம் சென்னை சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் நீதித்துறை, ஆட்சித் துறை, சட்டமன்றம், பத்திரிகைத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்றும், நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழகம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அம்பேத்கார் பல்கலைக் கழகம் சரியான 3 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்கும் வகையில் டாக்டர் பட்டத்தை ஜனாதிபதியின் கைகளால் வழங்கி உள்ளது. நீதித்துறை மற்றும் சட்டத்துறை வரலாற்றில் இவ்வாறு கவுரவிக்கப்பட்டது இது முதல்முறையாகும். இந்த டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தனது பயணத்தை துவக்கினார். 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து உள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு பீகார் மாநில கவர்னராக பதவி வகித்து உள்ளார். ஏழைகளின் பாதுகாவலனாக இருப்பவர் இவர். கேரள மாநில கவர்னரான சதாசிவம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். அவர், நமது மண்ணின் மைந்தர். அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே நீதித்துறையில் மிக உயர்ந்த பதவிக்கு வந்தார். இவரது காலத்தில் பல்வேறு மிகச்சிறந்த தீர்ப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக 1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

அதே போல் மனித தன்மைக்கு எதிரான கையால் துப்புரவு செய்யும் பணிக்கு தடை விதித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட் நீதிபதியான பாப்டே வழக்கறிஞர் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆதார் இல்லாமல் எந்த இந்தியரும் இருக்கக் கூடாது. அரசின் மானியங்கள் அடிப்படை சேவைகள் மக்களுக்கு கிடைக்க அது வழிவகை செய்யும் என்ற சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவர்.

அதே போல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 1982-ம் ஆண்டு மகராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியை துவக்கியவர். பெண் கைதிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்காக தீர்ப்புகளை வழங்கிய அவர் சென்னை ஐகோர்ட்டின்  தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழ்நாடாகும். நீதி கேட்ட பசுவிற்காக, அதன் கன்றை கொன்ற தனது மகனை தேர் காலில் இட்டு கொன்ற மனுநீதி சோழன், நீதி தவறியதற்காக தனது உயிரை விட்ட பாண்டிய மன்னன், புறாவிற்காக தனது தொடையிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலை வணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு.

இந்திய அரசியலமைப்பின்படி, நீதித் துறை, ஆட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் பத்திரிகைத் துறை ஆகிய நான்கு தூண்கள் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். தமிழ்நாட்டில் இந்த நான்கு பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன என்பதை நான் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்காசிய நாடுகளில், சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம், நமது டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம். ஆசியாவிலேயே மிகக் குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக் கழகத்திற்கென தனியாக சென்னையிலுள்ள பெருங்குடியில் 62 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வளாகம் அமைக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கப்பட்டது.

சட்டக்கல்வி மேம்பாட்டிற்கு ஜெயலலிதாவும் அரசும் எடுத்த நடவடிக்கைகள் ஒரு சிலவற்றை இங்கே கூற விரும்புகிறேன். திருச்சி தேசிய சட்டப் பள்ளி துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் குறைந்த செலவில் சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில், 11 சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகளாகும். கடந்த ஆண்டு மட்டும், புதிதாக 3 அரசு சட்ட கல்லூரிகளை நாங்கள் துவக்கினோம். இந்த ஆண்டு, மேலும் 3 புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படவுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள் கட்டுதல், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 998 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சட்ட பல்கலைக் கழகங்களில் முதன் முறையாக மிகப்பெரிய அளவில் ஏ.ஐ.ஆர். இணைய வழி சட்டத் தொகுப்பகம் மற்றும் சட்டச் செயலி பகிர்வகம், நமது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டப் பல்கலைக் கழகம் மற்றும் ஒவ்வொரு அரசு சட்டக் கல்லூரிக்கும், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உரிய நிதி, அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

சட்டத்தின் அனைத்து பயன்களும் ஏழை மக்களை சென்றடையும்படி பார்த்துக் கொள்ளும் கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றார் அம்மா. எனவே நீதியரசர்களும், நீதிமன்றங்களும் இந்த இலக்கை அடைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அதற்கு அம்மாவின் அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து