முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகள் பாதுகாப்பில் மாநில உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு பிரச்சினை எழுப்பினார்.அப்போது அவர் பேசுகையில் , மத்திய அரசு அணைகளின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் ஆகும். தமிழகத்தில் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மத்திய அரசு அதிகாரங்களை தன்னிடம் குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியதாவது:மத்திய அரசு 12.12.2018 அன்று அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 ஐ நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது. இது தொடர்பாக பிரதமருக்கு 14.12.2018 அன்று நான் எழுதிய கடிதத்தில், இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு நீர்வள அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளேன்.இந்த மசோதாவிற்கு முன்பாக, மத்திய அரசு ஏற்கனவே வரைவு அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2016 ஐ நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களின் ஆலோசனை, கருத்துகளை கோரியது. ஒரு மாநிலத்திற்கு சொந்தமானதாக இருந்தும் வேறொரு மாநிலத்தில் அமைந்திருக்கும் அணைகளுக்கென தனிப்பட்ட சட்டப்பிரிவு ஏதும் இந்த மசோதாவில் இடம் பெறாததால், இந்த மசோதா தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல.

எனவே, 11.9.2016 அன்று பிரதமருக்கு இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டது. 15.6.2018 அன்று பிரதமருக்கு மீண்டும் இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டது. மேலும், இதே கருத்தினை வலியுறுத்தி 26.6.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 26.6.2018 அன்று தமிழ்நாடு மக்களின் கருத்துகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று 14.12.2018 நாளிட்ட கடிதத்தில் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018-ன் பிரிவு 23(1)-ன் படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறொரு மாநிலத்தில் அமைந்திருக்கும் பட்சத்தில், அந்த அணை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். தமிழ்நாட்டிற்கு சொந்தமான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த அணைகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அணையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பது தமிழ்நாட்டின் உரிமைகளில் தலையிடுவதாகும். இது அரசியல் சாசன அமைப்பிற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானதாகும்.

எனவே, அணை பாதுகாப்பு மசோதா, 2018 - ன் பிரிவு 23(1) - ஐ, அணை வேறு மாநிலத்தில் அமைந்திருந்தாலும் அந்த அணை எந்த மாநிலத்திற்கு சொந்தமோ அந்த மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி திருத்தம் செய்ய வேண்டும் எனவும், முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் உறுதி படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு 14.12.2018 நாளிட்ட கடிதம் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், அணையை பராமரிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, அணை அமைந்துள்ள காடுகள், வன விலங்குகள் சரணாலயத்திற்குள் சென்று வர முழு உரிமை அளிக்கும் வகையில் பிரிவு 23-ன் கீழ் ஒரு துணைப் பிரிவினை கூடுதலாக இந்த மசோதாவில் சேர்க்க வேண்டும் எனவும் 14.12.2018 நாளிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமரிடம் 27.1.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவில் உள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றான அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 குறித்து தனது 15.6.2018 மற்றும் 14.12.2018 நாளிட்ட கடிதங்களைச் சுட்டிக்காட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைப்பது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகும் என்பதைக் குறிப்பிட்டு, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 -யை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே கருத்து பிரதமரிடம் 15.6.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018-ஐ திரும்பப்பெற வைத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.அண்மையில் மத்திய அமைச்சரவையின் பொருளாதார கமிட்டி அணை பாதுகாப்பு மசோதாவிற்கு அனுமதி அளித்தாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. முன்பு இம்மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அ தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிர எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனால் அந்த மசோதா சட்டமாகவில்லை.

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளின் மீதான தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநாட்ட அம்மாவின் அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து