சேலத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரி நடப்பாண்டிலேயே துவக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சேலம் : சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி இந்த ஆண்டே துவக்கப்படும் என்றும்,  போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-
 கேள்வி:-  சம்பா சாகுபடிக்கு எப்பொழுது தண்ணீர் திறக்கப்படும்?
பதில்:-  90 அடி உயரத்திற்கு தண்ணீர் இருக்கும் பொழுது திறந்தால் தான் விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும்.  இப்பொழுது உடனே திறந்தால், இடையில் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டால் விளைச்சல் முதிர்ச்சி பெறுகின்றபொழுது பயிர்கள் பதராகப் போய் விடும். கடந்த காலத்தில், இரண்டு வருடத்திற்கு முன்பு 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பதராகப் போய் விட்டது. அப்பொழுது நாம் கர்நாடகாவிடம் 3 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டபொழுதும் கொடுக்கவில்லை. இரண்டாண்டுகள் இதுபோன்ற நிலைமையை நாம் சந்தித்தோம். அதனால், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்பொழுது, கேரளாவிலும், குடகுவிலும் மழை அதிக அளவில் பொழிந்து கொண்டிருப்பதினால், கர்நாடக அணைக்கு தண்ணீர் வருகின்ற பொழுது தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீர் முழுவதும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து பாடுபட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்குண்டான நீரை திறந்து விடப்படும்.
கேள்வி:-  கர்நாடகா முதல்வரிடம் கூடுதலாக தண்ணீர் கேட்க வாய்ப்பிருக்கின்றதா?
பதில்:- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காமல் இருக்கின்ற பொழுது கூடுதலாக எப்படிக் கேட்க முடியும்? கொடுத்தால் சந்தோஷம் தான். தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் கிடைத்தாலே போதும்.
கேள்வி:-  ஆடி 18-க்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- நீர் வருவதை வைத்துத் தான் திறந்துவிட முடியும்.
கேள்வி:- விரைவுச் சாலை திட்டம்...
பதில்:-  இன்று காலையில் தமிழ்நாடு கிராம வங்கி விழாவின்போதுகூட, கிட்டத்தட்ட 70 விவசாயிகள், எங்களுடைய நிலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் கொடுங்கள். விரைவுச் சாலை வந்தால் நல்லது என்று மனு கொடுத்தார்கள். விரைவுச் சாலையை பலர் விரும்புகின்றார்கள். சிலர் வெறுக்கின்றார்கள். விரைவுச் சாலை சேலத்திற்கு மட்டுமல்ல, நாமக்கல், கரூர், மதுரை என்று கேரளா வரைக்கும் செல்கின்றது. இது மத்திய அரசின் மிக முக்கியமான திட்டம், முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்படுகிறது. ஊடகத்தினரும் பலமுறை இதுகுறித்து கேட்டுவிட்டீர்கள். தமிழக அரசுக்கு, யாரையும் வற்புறுத்தியோ, மன சங்கடத்திற்கு உள்ளாக்கியோ நிலத்தை பெறவேண்டுமென்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட கிடையாது.  சேலத்தில் தொப்பூர் முதல் ஓமலூர் வரை எத்தனை உயிர்ப்பலி ஏற்படுகின்றது? அதிக வாகனப் பெருக்கம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகளை மாற்றி இன்றைய தேவைக்கேற்ற சாலைகளை அமைப்பது தான் அரசின் கடமை.
 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 734 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளை விரிவுபடுத்தி பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை அமைத்தனர். தற்பொழுது அதைவிடவும் கூடுதலான சாலை தேவைப்படுகின்றது. அப்பொழுது 100 வாகனமென்றால் தற்பொழுது 400 வாகனமாக பெருகி 300 மடங்கு அதிகமாகிவிட்டது. இந்த 300 மடங்கு அதிகமான வாகனம் செல்வதற்கு பழைய சாலைகளை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா? மேலும், இந்தச் சாலைகளை நவீன முறையில், விபத்தில்லாமல் இருப்பதற்கான முறையில் அமைக்கவிருக்கின்றார்கள்.  இதனால், கிட்டத்தட்ட 60, 70 கிலோமீட்டர் பயண தூரம் குறைகின்றது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகின்றது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும்பொழுது அதில் அமைந்துள்ள வீட்டிற்கு உண்டான கழிவுத் தொகைக்கான பணத்தைத்தான் வழங்கினார்கள். இப்பொழுது கழிவுத் தொகை இல்லாமலேயே பணம் வழங்குகின்றனர். அதேபோல, தென்னை மரத்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 30 ஆயிரம், ரூபாய் 40 ஆயிரம் வழங்குகின்றார்கள். எனவே, எந்தவிதத்திலும்  யாருக்கும் நஷ்டம் ஏற்படாவண்ணம் வழங்க வேண்டுமென்று நாங்கள் மத்திய அரசை கேட்டிருக்கின்றோம்.
 நம்முடைய பகுதி வளர்ந்து வருகின்ற ஒரு பகுதியாக உள்ளதாலும், புதிய கல்லூரிகளை அதிகமாக திறந்து கொண்டிருப்பதாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியுள்ளதாலும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு நல்ல சாலை வசதி தேவையல்லவா? உள்கட்டமைப்பை ஏற்படுத்தினால் தான் தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மக்களின் நலன், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தான் நாங்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக நெல்லை, கோவையில் பலரை கைது செய்திருக்கின்றார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?
பதில்:- தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குக்கூட தமிழக உளவுத் துறை எச்சரிக்கை கொடுத்தது. அதை அவர்கள் சரியாக பொருட்படுத்தவில்லை. தமிழகத்தின் உளவுத் துறை சரியான நேரத்தில், சரியான தகவலை மத்திய அரசிற்கு கொடுத்து இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை நிற்கின்றது.
கேள்வி:-  அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் தி.மு.க.-விற்கு வந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:-  உங்களுக்குத் தெரியுமா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினரையும் தொட்டுப் பார்க்க முடியாது. அனைவரும் எம்.ஜி.ஆர் வழியிலே வந்து, அம்மா வழியிலே நின்று, இன்று இருபெரும் தலைவர்களின் ஆட்சியும், கட்சியும் நிலைத்து நிற்க வேண்டுமென்று உள்மனதோடு, மனமகிழ்ச்சியோடு எங்களோடு இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணும் கனவு, எந்தக் காலத்திலும் நனவாகாது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று நினைத்தார்கள், நீங்களும் பலமுறை என்னிடம் கேள்வி கேட்டீர்கள். அதற்குண்டான பதிலையும் பலமுறை சொல்லி விட்டேன்.  இப்பொழுது இரண்டாண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 2021-லும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் அமையும்.
கேள்வி:- அ.ம.மு.க. நிர்வாகிகளை இழுப்பதற்கு நீங்கள் பணம் மற்றும் டெண்டர் தருவதாக சொல்லியிருப்பதாகவும், அதற்கான ஆடியோவை வெளியிடுவதாகவும் தினகரன் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- ஆடியோ வெளியிடட்டும், நாங்களும் தயாராக இருக்கின்றோம். அவர் ஏதாவதொரு டூப் விட்டுக் கொண்டு தான் இருப்பார்.  எல்லோரும் எங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா? எல்லோரும் வந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா? அ.ம.மு.க.-விற்குச் சென்றவர்கள் எல்லாம் சாரை, சாரையாக இன்று தாய்க் கழகத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் இப்பொழுது எங்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். முழு ஒத்துழைப்பையும் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். அதேபோல, மாநிலம் முழுவதும் அ.ம.மு.க.-வில் இருப்பவர்கள் தாய்க் கழகத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று அ.தி.மு.க. பலம் பொருந்திய இயக்கமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் அரசின் சார்பாக புதிய அரசு சட்டக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டே துவக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து