முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      அரசியல்
Image Unavailable

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி பிரியங்காவை உடனடியாக தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. ராகுல் தனது ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் உண்ணாவிரதமும் இருந்தனர். ஆனால் ராகுல் தனது முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அத்துடன் புதிய தலைவரை தேர்வு செய்வதில் நான் தலையிடப்போவது இல்லை என்றும் கூறி ஒதுங்கி விட்டார்.

இதனை தொடர்ந்து பிரியங்காவை புதிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், பிரியங்காவை புதிய காங்கிரஸ் தலைவராக உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இயற்கையிலேயே தகுதி உள்ளவர் ராகுல் காந்தி மட்டுமே. இருப்பினும் அவர் திட்டவட்டமாக இனி பதவியில் நீடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.  மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி எதிர்க்கட்சியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இப்படி எதிர்க்கட்சியை நிர்மூலமாக்குவது ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயகத்தை வலுப்படுத்த வலுவான எதிர்க்கட்சி அவசியம்.

இதற்காக காங்கிரசுக்கு போர்க்குணம் கொண்ட தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.  மிரட்டலுக்கு பயப்படாதவராக மக்கள் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இப்போதைய சூழலில் பிரியங்காவே காங்கிரஸ் தலைவராக முழு தகுதி படைத்தவர் ஆவார்.  எனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி பிரியங்காவை உடனடியாக தலைவராக தேர்வு செய்ய வேண்டும். கட்சிக்கு தலைமை இல்லாத நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. அவர்கள் மனதில் அவ நம்பிக்கையும் ஏற்பட்டு விடக்கூடாது. இதனை வலியுறுத்தி ராகுல் உள்ளிட்ட மேலிட தலைவர்களுக்கு கடிதம் எழுத முயற்சித்து வருகிறேன். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து