முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்வித் துறையில் சீர்திருத்த நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது - ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின் அமல்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேறியது.

மக்களவையில் கடந்த திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பிறகு, மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. மசோதா மீதான விவாதத்தின் போது, அ.தி.மு.க. எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன் மற்றும் விஜிலா சத்யானந்த் ஆகிய இருவரும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும் என்றும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள எக்சிட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இதற்கான வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை. இதையடுத்து, இந்த மசோதா மீதான விவாதம் நிறைவடைந்ததையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் சட்டமாக அரசாணையில் வெளியிடப்படும்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் வருவதனால், நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனைக் குழு அமைக்கப்படும். தேசிய மருத்துவ ஆணையத்தில் மொத்தம் 29 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 20 பேர் நேரடியாக நியமனம் செய்யப்படுவதுடன், 9 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். தேசிய மருத்துவ ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் தர அளவை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தர நிபந்தனைகளை பூர்த்தி செய்து இயங்குவதற்கான அனுமதியை ஒரு மருத்துவக் கல்லூரி பெறும் பட்சத்தில் ஆண்டுதோறும் அவை தங்களுக்கான அனுமதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது என மத்திய அரசு நம்புகிறது. அதே போல், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின்படி, எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும் இது இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து