முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உன்னாவ் விவகாரம்: பெண்ணின் புகைப்படத்தை வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை விதிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

உன்னாவ் பெண்ணின் பெயரையோ புகைப்படத்தையோ வெளியிட சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனிடையே உன்னாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டதாக உ.பி. அரசு தகவல் அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவை சேர்ந்த சிறுமி, எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்களின் பாதுகாப்பில் சிறுமி இருந்து வந்தார். கடந்த ஞாயிறன்று காரில் ரேபரேலிக்கு உறவினர்கள், வழக்கறிஞருடன் சிறுமி சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் சிறுமியின் அத்தைகள் இரண்டு பேர் உயிரிழந்தனர். சிறுமியும், வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமி சென்ற கார் விபத்தில் சதி இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். இதனிடையே உன்னாவ் சாலை விபத்து வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது. எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மற்றும் 10 பேர் மீது சி.பி.ஐ. கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், தினந்தோறும் வழக்கை விசாரித்து 45 நாட்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞருக்கும் இன்னும் நினைவு திரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், உன்னாவ் சிறுமியின் மாமாவை, பாதுகாப்பு கருதி உ.பி. சிறையிலிருந்து டெல்லி திகார் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, புகைப்படத்தையோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது என தடைவிதித்தார். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மோசமாக இருப்பதால் டெல்லி மருத்துவமனையிலிருந்து மாற்றத் தேவையில்லை என்று கூறி வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.  முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டு விட்டதாக உ.பி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுள்ளார்.

உன்னாவில் வன்கொடுக்மைக்குள்ளான பெண் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அப்பெண்ணுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்தில் சிக்கிய பெண்ணின் வழக்கறிஞருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் லக்னோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து