முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேவஸ்தான சிறப்பு அதிகாரி கூறினார்.

திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 30-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் 4-ம் தேதி கருட சேவை, 5-ம் தேதி தங்க தேரோட்டம், 7-ம் தேதி தேரோட்டம், 8-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை வாகன வீதிஉலா நடக்கிறது. கருட சேவை அன்று இரவு 7 மணியில் இருந்து 12 மணி வரை தங்க கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார். கொடியேற்றம் அன்று அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். அன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

செப்டம்பர் மாதம் 24-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் பணி, 29-ம் தேதி மாலை அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்கிறது. எனவே திருமலை- திருப்பதி தேஸ்தானத்தின் இதர துறைகளை சேர்ந்த அதிகாரிகள், என்ஜினீயர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளை அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அடுத்த மாதம் 14-ம் தேதி பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியளவில் கருட சேவை நடக்கிறது. பவுர்ணமி கருடசேவையை, பிரம்மோற்சவ விழா கருடசேவை ஒத்திகை நிகழ்ச்சியாக நடத்த வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்ய சாரண-சாரணியர்கள் 1000 பேர், ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் 3,500 பேரை நியமித்து கொள்ளலாம்.

லட்டு, அன்னப்பிரசாதம் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படையினரும் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அதிகாரிகளும், பக்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் பிரம்மோற்சவ விழா நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து