முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளம் - இடிபாடுகளில் சிக்கி நீலகிரியில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி, நீலகிரி குந்தா வட்டத்தில் உயிரிழந்த ஐவரின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவலாஞ்சியில் 6, 7 மற்றும் 8 ஆகிய மூன்று தினங்களில் முறையே 405 மி.மீ., 820 மி.மீ. மற்றும் 911 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. உடனடியாக மீட்பு மற்றும் நிவராணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடமாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். நீலகிரி மாவட்டநிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், கூடுதலாக மாநிலப்பேரிடர் மீட்புக் குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் 66 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 491 நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 1704 பேர், 28 பேரிடர்மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான வேட்டி, சேலை, தலையணை மற்றும் போர்வை போன்றவற்றை வழங்கவும், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன். நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளைச் சீர்செய்வதற்காக 29 ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களைத்தடுக்கும் விதமாக 23 நிரந்தர மருத்துவக் குழுக்களும், 13 நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காட்டுக்குப்பையில் கனமழையில் சிக்கியிருந்த 36 மின் பணியாளர்களும் பொதுமக்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவலாஞ்சியில் சிக்கியிருக்கும் 40 நபர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும்தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாகம்மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால் ஆகியோர் உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.


இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி, குந்தா வட்டத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் சென்னன், உதகை வட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி விமலா, அர்ஜூனன் என்பவரது மனைவி சுசீலா, கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் பாவனா மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பச் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அவர்களது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து