முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு அளித்த வாக்கு சதவீதம் சிதறவில்லை! அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அப்படியே உள்ளது: வேலூர் தேர்தல் முடிவு குறித்து ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அ.தி.மு.க.விடம் உள்ளது என்பதைத் தான் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறைசாற்றுகின்றன. என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பனனீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

வேலூர் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.வின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி. சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது, கட்சியை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தனித் தன்மை குறித்தும், அங்கு எத்தகைய சூழலில் வாக்குப் பதிவை அ.தி.மு.க. எதிர்கொண்டது என்பது பற்றியும், நன்கு அறிந்த அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும், வேலூர் தொகுதியில் 46.51 விழுக்காடு வாக்குகளை அ.தி.மு.க. வேட்பாளர் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் தெளிவாகப் புரியும்.

அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் களம் புகும் அணிதான் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய அணியாக வெற்றிக் கனியை பறிக்கும் என்பதைத் தான், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. பெற்றிருக்கும் வாக்குகள் உணர்த்துகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத் தான், வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறைசாற்றுகின்றன. இத்தகைய மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அமைச்சர்கள் , தலைமை கழக நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும், எல்லாவற்றுக்கும் மகுடமாய் விளங்கும் வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து