முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால் பஸ்சில் இலவச பயணம் - இந்தோனேஷியாவில் நூதன திட்டம் அறிமுகம்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஜகார்தா : பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், கோப்பைகள் போன்றவற்றை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக அவர்களுக்கு இலவச பயணச்சீட்டு அளிக்கும் நூதன திட்டம் இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குப்பைகளால் கடலை மாசுபடுத்துவதில் சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தோனேஷியா வகிக்கிறது. இந்த நிலையில், வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் குப்பைகளை 70 சதவீதம் குறைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிப்பது, பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது போன்ற திட்டங்களை இந்தோனேஷிய அரசு வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள், கோப்பைகளைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டத்தை அந்த நாட்டின் சுரபயா நகரில் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். மக்களிடையே இந்த திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் சுமார் 16,000 பேர் பழைய பிளாஸ்டிக் பொருள்களைக் கொடுத்து இலவச பயணம் மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கு மட்டுமன்றி, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தில் 20 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பதற்கான தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தில் பயணச் சீட்டு வழங்குவதற்காக ஓர் அதிகாரி இருப்பார். பாட்டில்கள் மற்றும் கோப்பைகளை எண்ணிப் பார்த்து அவர் பயணச் சீட்டு வழங்குவார்.

3 பெரிய பிளாஸ்டிக் பாட்டில்கள், 5 நடுத்தர அளவு பாட்டில்கள் அல்லது 10 பிளாஸ்டிக் கோப்பைகள் கொடுத்தால் ஒரு மணி நேரம் வரை பேருந்தில் பயணிக்க முடியும். அந்த பாட்டில்கள் சுத்தமானதாகவும் மறுசுழற்சிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், பிறகு மறுசுழற்சி ஆலைகளுக்கு ஏலம் விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து