முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் 3-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் எடப்பாடி

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நாட்டின் 73-வது சுதந்திரதினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 120 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் 3-வது முறையாக கொடியேற்றுகிறார்.

இதையொட்டி, கோட்டை கொத்தளம், கொடிக்கம்பம் ஆகியவை வர்ணம் பூசப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சட்டப்பேரவை கட்டிடமும் புதுப்பொலிவுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரதிநிதிகள் பார்ப்பதற்கு வசதியாக கோட்டை கொத்தளம் எதிரே 4 பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுதல் நிகழ்ச்சி முடிந்ததும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு விருது, வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வர் நல் ஆளுமை விருது, சிறந்த உள்ளாட்சிக்கான விருது, சிறந்த மாற்றுத்திறனாளிக்கான விருது உட்பட விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவிக்கிறார். பிறகு, மாற்றுத்திறன் குழந்தைகள் இனிப்புகள் வழங்குகிறார்.

சுதந்திர தின விழா அணிவகுப்பை பொறுத்தவரை, முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், அதிரடிப் படையினர், குதிரைப் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கான முதல் ஒத்திகை கடந்த 8-ம் தேதியும், 2-வது ஒத்திகை நேற்றும் நடத்தப்பட்டது. 3-வது ஒத்திகை 13-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது.

சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று பொது விருந்தை தொடங்கி வைக்க உள்ளார். திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பங்கேற்க உள்ளனர். சென்னை முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பொது விருந்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து