முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்குள் தற்கொலை படை பயங்கரவாதிகள் ஊடுருவல் - உளவுத்துறை எச்சரிக்கையால் பலத்த பாதுகாப்பு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் அங்கு கலவரம் வெடிக்கக் கூடும் என கருதி ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரிய அளவில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளிடம் புகார் கூறியது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பல நாடுகள் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. எனவே ஏதாவது செய்து உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது.

இதற்கு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் தான் சரியாக இருக்கும் என கருதிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விட்டுள்ளது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி இருக்கிறார்கள். மசூத் அசாரின் தம்பி அப்துல்ரவுப் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பவல்பூரில் தங்கி இருந்து பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு ஊடுருவ செய்து வருகிறான். அவனை ஐ.எஸ்.ஐ. உளவு படையினர் ராவல்பிண்டிக்கு அழைத்திருந்தனர். அங்கு வைத்து இந்த சதி திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து பவல்பூருக்கு திரும்பிய அப்துல்ரவுப் தற்கொலை பயங்கரவாதிகளை தயார்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ செய்துள்ளான். மொத்தம் 7 தற்கொலை பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பானிகால் அல்லது பிர்பண்டல் மலைப்பகுதி வழியாக ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜுரி அல்லது பூரி மாவட்டம் வழியாக உள்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது. பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் ஆனந்த்நாக் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகளும் நடந்து வருகின்றன.

உடனடியாக அவர்கள் தாக்குதல் நடத்தாதபட்சத்தில் சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்தலாம் என கருதப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருவேளை காஷ்மீரை தாண்டி இந்தியாவின் மற்ற பகுதிகளில் நுழைவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே காஷ்மீரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து