முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றுகிறார் - வீரதீர செயல்களுக்கான விருதுகளை வழங்குகிறார்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களுக்கு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை சாதனையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா சென்னை கோட்டை கொத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இந்த உரையில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திர ஒய்வூதியம் உயர்வு உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி துணிவு சாகச செயலுக்கான விருதுகள் முதல்வரின் நல் ஆளுமை விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார். வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கான அப்துல் கலாம் விருது, அரசுத்திட்டங்களை மக்களிடம் சீரிய முறையில் கொண்டு சென்ற அரசுத்துறைகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபடும் அமைப்புகளுக்கான விருதுகளை முதல்வர் வழங்கி சிறப்பிக்கிறார். இதன் பின்னர் விருதாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார். இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

இந்த விழா நிறைவடைந்ததும் மாலையில் ஆளுநர் சுதந்திர தினத்தையொட்டி முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு விருந்தளிக்கிறார். மேலும் சென்னை உள்ளிட்ட 448 திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடும் பொது விருந்தும் அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, விடுதலை பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை முறையில் பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, ஆங்கிலேயர்களின் அடிமைத்தலையிலிருந்து நமது தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்று தந்தனர். அத்தகைய வீரத் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் நன்னாள், இச்சுதந்திர தின திருநாளாகும். தன்னலமற்ற தியாகிகள் அரும்பாடுபட்டு போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை போற்றி பெருமைப்படுத்தும் வகையில், விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 13,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, ஆகியோரது வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தியாகி சுந்தரலிங்கனார் மணிமண்டபம், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு மண்டபம், என சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு மண்டபங்களை நிறுவி சிறப்பித்தல், சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தல், முக்கிய இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிலைகளை நிறுவுதல், அவர்களின் பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் விழாக்கள் நடத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த இனிய நன்னாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நம் இந்தியத் திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம். மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து