முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அளவர்களுக்கு 17 குடியிருப்புகளுடன் அலுவலகங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 2 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட அளவர்களுக்கான 17 குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மக்களைத் தேடி அரசு எனும் சீரிய கோட்பாட்டின்படி, அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் - கீழ்பென்னாத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - வாளாடி மற்றும் தொட்டியம், கரூர் மாவட்டம் - பஞ்சப்பட்டி, திருப்பூர் மாவட்டம் - வேலம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் - ஒத்தக்கல் மண்டபம், தருமபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிபட்டி, மதுரை மாவட்டம் - கொக்குளம் மற்றும் நாகமலை, விருதுநகர் மாவட்டம் - சல்வார்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் - இராமேஸ்வரம் மற்றும் திருவாடானை, சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் மற்றும் எஸ்.எஸ்.கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் - திருக்கழுக்குன்றம், வேலூர் மாவட்டம்- குடியாத்தம் ஆகிய இடங்களில் 2 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட அளவர்களுக்கான 17 குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறையில், நில அளவை குறியீடு செய்தல், நில ஆவணங்கள் பராமரித்தல், நில உரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறையின் பணிகள் தொய்வின்றி செம்மையாக நடைபெறும் வகையில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் காலியாகவுள்ள நிலஅளவர், வரைவாளர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யகோபால், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் இரா.செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து