மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு - குடிசைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 4100 வரை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      தமிழகம்
rain affect areas cm edapadi announced 2019 08 14

சென்னை : சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக மீட்பு மற்றும் நிவராணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், கூடுதலாக மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் 66 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 456 நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 400 நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், 720 தூய்மைக் காவலர்களும், 160 மின்துறை ஊழியர்களும் ஆக மொத்தம் 1280 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 60 ஜே.சி.பி. இயந்திரங்கள், முப்பது 108 ஆம்புலன்சுகள், 16 ஜெனேரேட்டர்கள் மற்றும் 70 மரம் அறுப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

எனது உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் சத்யகோபால் ஆகியோர் உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், 13-ம் தேதி அன்று துணை முதல்வர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு அப்பணிகளை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட உத்தரவுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6910 நபர்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பால் பவுடர் வழங்கப்பட வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி மற்றும் குளோரின் ஆகியவை தெளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களில் இதுவரை 23 நிரந்தர மருத்துவ முகாம்கள் மற்றும் 13 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 9,333 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் தேவைக்கேற்ப இம்முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது குடும்பச் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தலா 10 லட்சம் ரூபாய் எனது உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. அதே போல் காட்டுக்குப்பை, நஞ்சநாட்டை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சஜீவ் என்ற நபரின் குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த 11 நபர்களுக்கும் மற்றும் 2 கால்நடைகள் இழப்பிற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியினை 16-ம் தேதிக்குள் முடித்து, வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளேன்.

சேதமடைந்த 153.34 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட நிலையில் அவற்றை முழுமையாக சீரமைக்கவும், சேதமடைந்த 185 சிறுபாலங்கள், 115 மின் கம்பங்கள், 3.5 கி.மீ நீளமுள்ள மின் கம்பிகள் மற்றும் 6 மின் மாற்றிகள் ஆகியவற்றை உடனடியாக மறுசீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில், 31 இடங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவழிப்போக்குவரத்திற்கு ஏதுவாக சீரமைக்கப்பட்ட 24 சாலைகளில், இருவழிப் போக்குவரத்திற்கு ஏற்ப சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூபாய் முப்பது கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து