இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவு : சச்சின் இரங்கல் - டிராவிட் நேரில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
VP Chandrasekhar 2019 08 16

Source: provided

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர். இவர் மயிலாப்பூர் விஸ்வேஸ்வரா புரத்தில் வசித்து வந்தார்.இந்த நிலையில் வி.பி. சந்திரசேகர்  தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 57 வயதான அவர் தமிழக அணிக்கும் கேப்டனாக பணியாற்றி இருந்தார்.

டி.என்.பி.எல். போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார். பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆலோசகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தின் போது டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்க காரணமாக திகழ்ந்தவர் வி.பி.சந்திரசேகர். அவர் அந்த அணியின் மேலாளராக பணியாற்றி இருந்தார்.அவருக்கு சவுமியா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.இந்திய அணிக்காகவும், தமிழக அணிக்காகவும் ஆடிய தொடக்க அதிரடி ஆட்டக்காரரான வி.பி.சந்திர சேகரின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் அவரது மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ ‘‘வி.பி.சந்திரசேகர் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவருடன் எனக்கு உள்ள தொடர்பு என்றும் நினைவில் நிற்கும். அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்’’ என்றார். இந்திய அணியின் தடுப்புசுவர் ராகுல்டிராவிட் நேற்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீகாந்த், வி.வி.எஸ்.லட்சுமண், அணில்கும்ளே, முரளிகார்த்திக், ஹர்பஜன்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா, அபினவ் முகுந்த், இர்பான் பதான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவையும் அனுதாபம் தெரிவித்து உள்ளன.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அவரது செல்போன் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து