முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலம் உழைக்க முடியாத முதியோர்கள் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை துவக்கி வைத்து நலத்திட்டஉதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது, 

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டுமென்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும் நடத்தப்படும். பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும். மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான திட்டமாக திகழும் இந்த சிறப்புத் திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு 25 ஆயிரம் வீதம் ரூ. 76 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மற்றும் அனைத்துத் தரப்பு மக்களாலும் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக இந்தத் திட்டத்தை துவக்கியிருக்கின்றோம்.

தமிழகத்திற்கு ஒரு முதல்வர் கிடைத்திருக்கின்ற காரணத்தினாலே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 234 தொகுதி இருந்தாலும் எடப்பாடி தொகுதியில் இருப்பவர் தான் முதல்வராக இருக்கிறோம். இந்த முதல்வரை உருவாக்கியவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்ற பொதுமக்கள். நீங்கள் ஓட்டு போட்டு, சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த காரணத்தினால்தான் இன்றைக்கு இந்த நிலையில் இருந்து உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். மக்கள் கொடுக்கின்ற மனுக்களை நாங்கள் பதிவு செய்து படிப்படியாக திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம். நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த ஆட்சி 10 நாள் தாக்குப் பிடிக்குமா? ஒரு மாதம் தாக்குப் பிடிக்குமா? 6 மாதம் தாக்குப் பிடிக்குமா? என்று சொன்னார்கள். இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முழுக் காரணம் மக்களும், அதிகாரிகளும் தான். உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துத் திட்டங்களும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தான் காரணம்.

நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் தேவையான திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். பேரூராட்சி, நகராட்சி என அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வீடில்லா மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டு மனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோர்களுக்கு முதியோர் உதவித் திட்டத்தை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம், புதிதாக, தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். காப்பீட்டுத் திட்டம் இல்லாதவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து