முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திராயனின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது: இஸ்ரோ

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 விண்கலம், ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை படிப்படியாக 5 முறை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜின் 1,203 வினாடிகள் இயக்கப்பட்டது. அதையடுத்து சந்திராயன் -2 விண்கலம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

இந்த நிலையில், ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் தீட்டிய திட்டத்தின்படி, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலத்தின் என்ஜினை 1,738 வினாடிகள் இயக்கி, நிலவின் சுற்று வட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்தினர். இந்தப் பணி காலை 9.02 மணிக்கு செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை நேற்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது. நிலவுக்கு 114 கி.மீ. அருகேயும், 18 ஆயிரத்து 72 கி.மீ. தொலைவிலும் சந்திராயன் - 2 சுற்றும். தொடர்ந்து வரும் 28-ம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சந்திராயன் -2-ன் பாதை இரண்டாவது முறையாகவும், செப்டம்பர் மாதம் 1-ம் தேதியன்றும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த தகவலை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து