புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என்ற கிரண்பேடிக்கு எதிரான உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு - செப்டம்பர் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      தமிழகம்
kiran bedi 2019 08 21

சென்னை : புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, அரசின் நடவடிக்கைகளில் தலையிட சிறப்பு அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளது என்று மத்திய அரசு 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டை அணுகி தீர்வு கண்டு கொள்ளுமாறு கிரண்பேடிக்கு அறிவுறுத்தியது. அதன்படி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கிரண்பேடி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதே போல் மத்திய அரசின் உள்துறையும் தனியாக மனுவை தாக்கல் செய்தது. அம்மனுவில், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக மத்திய உள்துறை புதுச்சேரி அரசுக்கு தகவல் அனுப்பியது. அந்தக் கடிதம் குறித்து புதுச்சேரி அரசே கேள்வி எழுப்பாத நிலையில் மூன்றாம் மனுதாரர் எப்படி அரசின் கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பி வழக்கு தொடர முடியும்? இதை தனி நீதிபதி கவனிக்கத் தவறி விட்டார். மனுதாரர் வழக்கு தொடர உரிமை இல்லை. நிர்வாகம் தொடர்பான விவகாரத்தை சட்டப்பேரவை அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது என்ற உத்தரவு தொடரும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் ஐகோர்ட் நிராகரித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் மனு குறித்து, புதுவை எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து