முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் கோலி - முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி இன்று முதல் டெஸ்ட்டில் விளையாட உள்ள நிலையில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நாளை (22-ந் தேதி) தொடங்குகிறது.

20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது போல டெஸ்ட் தொடரிலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் வீரர்கள் சாதித்தனர். புஜாரா, விகாரி, ரகானே, ரோகித்சர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்துவீச்சிலும் முத்திரை பதித்தனர்.

கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் விராட்கோலி அணிக்கு திரும்புகிறார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 2 சதம் அடித்து முத்திரை பதித்த அவர் டெஸ்ட் தொடரிலும் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

77 டெஸ்டில் 6613 ரன் குவித்துள்ள (131 இன்னிங்ஸ்) கோலி இந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைக்கும் ஆர்வத்துடன் இருக்கிறார்.

நாளைய டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது கோலிக்கு சவாலானது. ஏனென்றால் அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.

அகர்வாலும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்த வரிசையில் புஜாரா, கோலி உள்ளனர். மிடில் ஆர்டரில் விகாரி, ரகானே, ரோகித்சர்மா ஆகியோரில் 2 பேர் மட்டுமே இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை தொடக்க வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டால் விகாரி தொடக்க வீரராகவும் ஆடலாம்.

இதேபோல விக்கெட் கீப்பர் தேர்வும், பந்து வீச்சாளர் தேர்வும் சிரமமானதே. அனுபவம் வாய்ந்த விர்த்திமான் சஹா, இளம் வீரர் ரிஷப்பந்த் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ரிஷப் பந்துக்கே அதிகமான வாய்ப்பு உள்ளது. அவர் 7-வது பேட்ஸ்மேனாக ஆடுவார்.

3 வேகப்பந்து வீரர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்திய அணி களம் இறங்கும். பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெறுவார்கள். பயிற்சி ஆட்டத்தில் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரும் போட்டியில் உள்ளார்.

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர்.

5-வது பந்து வீச்சாளர் தேவைப்பட்டால் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு ஒரு பேட்ஸ்மேன் கழற்றி விடப்படலாம். ஆடுகள தன்மை அறிந்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

இந்திய அணி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சரித்திர சாதனை படைத்தது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் அக்டோபர் மாதம் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

இந்திய மண்ணிலும், சொந்த மண்ணிலும் ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், அகர்வால், புஜாரா, விகாரி, ரகானே, ரோகித்சர்மா, ரிஷப்பந்த், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், ஜடேஜா, விர்த்திமான் சஹா.

வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), ஹோப், ரோஸ்டன் சேஸ், டாரன் பிராவோ, ஹெட்மயா, பிராத்வெயிட், புரூகஸ், கேம்பபெல், கோர்ன்வால், டவுரிச், கேப்ரியல், கீமோ பவுல், கேமர்ரோச்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து