முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் தடுப்பணை கட்டப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியின் பொன்விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் சாலையில், திண்டல் சந்திப்பிலிருந்து வில்லரசம்பட்டி வழியாக ஊட்டி, கோத்தகிரி, சத்தி, ஈரோடு சாலையில் கண்ராத்தாங்குளம் அருகே சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலை பல்வழித் தடமாக ரூபாய் 22.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டம் புள்ளிக்கல் பாலத்தை இணைக்கும் வகையில் காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.

மாநிலச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பவானி, மேட்டூர் வழியாக தொப்பூர் வரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும்.

மேட்டுப்பாளையம் முதல் பவானி வரை ஏற்கனவே உள்ள இரு மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து மாவட்ட நெடுஞ்சாலை (15) மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை (82), சுமார் 98 கி.மீ. நீளத்திற்கு மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 77 கி.மீ. நீளமுள்ள பவானி முதல் கரூர் வரையுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையும் விரைவில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 67.76 கோடி மதிப்பீட்டில் உயர் சிகிச்சையுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

ஈரோடு மாவட்ட மருத்துவமனை மூலம் ரூபாய் 84.50 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கம்பாளையம் கிராமத்தில் ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் ஏரி அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதியும், 1800 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் மறைமுக கிணறுகள் நீர் செறிவூட்டுவதன் மூலம் பயன்பெறும். பவானி வட்டம், ஜம்பைக்கு அருகில் பவானி ஆற்றின் குறுக்கே ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. ஈரோடு, ஊராட்சிக் கோட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு மாநகராட்சிக்கு வழங்குவதற்கான குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகளும் மூன்று அல்லது நான்கு மாத காலங்களுக்குள் நிறைவு பெற்று என்னால் துவக்கி வைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். மேலும், ஈரோடு மக்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலான கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம், அழியாச் செல்வம் கல்விச் செல்வம் ஒன்று தான். ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்கள் களவாடி விடுவார்கள். நம் உயிர் இருக்கின்றவரை ஒட்டி இருக்கின்ற ஒரே செல்வம் கல்விச் செல்வம் மட்டும் தான். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வேளாளர் மகளிர் கல்லூரி உங்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன். பொருள் இருப்பவர்களுக்கு அந்த ஊரில் தான் செல்வாக்கு இருக்கும். ஆனால், கல்வி கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் பெருமை, சிறப்பு இருக்கும். அந்தச் சிறப்பை இந்தக் கல்லூரியின் மூலமாக நீங்கள் பெறவேண்டும்.

நாங்கள் படிக்கின்றபொழுது நடந்தே சென்று பள்ளியிலே படித்தோம். நான் படிக்கின்றபொழுது எங்கள் ஊரிலேயிருந்து ஆற்றைக் கடந்து பவானி வந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆற்றிலே தண்ணீர் நிறைந்துவிட்டால் பரிசலில் சென்று படிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கின்றது. குறித்த காலத்தில் நீங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியும், சிறந்த கல்வியை கற்க முடியும். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது அரசாங்கம் நிறைய சலுகைகளை கொடுக்கிறது.

யூடியூப், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளாகிய நீங்கள் மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ வேண்டும். மாணவிகள் உயர்கல்வி படித்து, மென்மேலும் வளர்ந்து உங்கள் பெற்றோர்களுக்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி, பொன்விழா கொண்டாடுகின்ற வேளாளர் கல்வி அறக்கட்டளை சிறந்து விளங்கி, நூற்றாண்டு விழா காணவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து