டெஸ்ட் போட்டியில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த ரஹானே, விராட் கோலி கூட்டணி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Virat-Kohli-and-Ajinkya-Rahane 2019 08 25

ஆண்டிகுவா : ஆண்டிகுவாவில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், துணைக் கேப்டன் ரஹானேவும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் சென்று அந்நாட்டுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கும், மேற்கு இந்திய தீவுகள் அணி 222 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 3-வது நாளான  ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து 260 ரன்கள் முன்னிலையுடன் ஆடியது.

கேப்டன் விராட் கோலி 51 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரஹானே 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு  104 ரன்கள் சேர்த்தனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருவரும்  புதிய சாதனையைச் செய்தனர். ரஹானே, கோலி ஜோடி டெஸ்ட் போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 8-வது முறையாகும்.  இதற்கு முன் சச்சின், கங்குலி ஜோடி அதிகபட்சமாக 4-வது விக்கெட்டுக்கு 7 முறை மட்டுமே 100 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். அந்த சாதனையை ரஹானே, கோலி ஜோடி முறியடித்தனர். கங்குலியும், சச்சினும் 7-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் சேர்க்க 44 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், 8-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் அடித்த சாதனையை ரஹானே, கோலி 39 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்கள்.

இருப்பினும சச்சின், கங்குலி ஜோடி, டெஸ்ட் போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு 2ஆயிரத்து 695 ரன்கள் சேர்த்துள்ளார்கள். அதை ரஹானே, கோலி ஜோடி இன்னும் முறியடிக்கவில்லை. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 2 ஆயிரத்து 439 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து