முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பதட்டம் _ போலீஸ் குவிப்பு

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் குடை பாறைப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு காளியம்மன் கோவில் முன்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக எடுத்துச் சென்று கோட்டைக்குளத்தில் கரைப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இந்த விநாயகர் சிலையை எடுத்து வரும்போது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் பின்னர் போலீசாரே எடுத்துச் சென்று குளத்தில் கரைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
விநாயகர் சிலையை பள்ளிவாசல் வழியாக எடுத்து வரும்போது மேளதாளங்கள் முழங்கக் கூடாது என்றும் அமைதியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றும் குடை பாறைப்பட்டி விநாயகர் சிலையை பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக எடுத்துச் செல்லும் போது பதட்டமான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவ்வழியாக வரும் வாகனங்களையும் வேறு பாதைக்கு திருப்பி அனுப்பினர்.
மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலை எடுத்து வந்த நிலையில் திடீரென ஊர்வலத்தை நிறுத்துமாறு ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் திடீரென்று அப்பகுதியில் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து சிலையை போலீசாரே எடுத்துச் செல்ல முயன்றனர். நீண்ட இழுபறிக்குப் பின்னர் விநாயகர் சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோட்டைக்குளத்தில் கரைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் _ மதுரை சாலையில் பரபரப்பான சூழல் உருவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து