முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் கையிருப்பை அதிகரிக்கிறது ஈரான்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

டெஹ்ரான் : அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான் அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கை தங்களுக்கு வியப்பு அளிக்கவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது. அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை கட்டுக்குள் வைக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கி கொள்ளவும் வழி வகுத்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு உடன்பாடு இல்லை. இது அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஆண்டு அவர் அறிவித்தார். அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அமெரிக்காவின் நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான், அந்த நாட்டுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தப் போவதில்லை என்று கூறியது.

இந்த நிலையில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுகிற செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிப்பதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இது உறுதியாகி உள்ளது. இது பற்றி ஈரான் அணு சக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வாண்டி டெஹ்ரானில் கூறியதாவது:-

நடான்ஸ் நகரில் உள்ள ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையத்தில் அதி நவீன எந்திரங்கள் மூலம் யுரேனியம் செறிவூட்டல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கடந்த ஆண்டு ஒருதலைபட்சமாக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது நடவடிக்கை இது. இந்த ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்த எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வரம்புகளை நாங்கள் உயர்த்த தொடங்கி உள்ளோம். நடான்ஸ் நகர யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் உள்ள எந்திரங்கள், முந்தைய எந்திரங்களின் திறனை விட பல மடங்கு அதிகம் திறன் கொண்டவை ஆகும். இவை 6-ம் தேதி  செயல்படத் தொடங்கி விட்டன. எதிர்த்தரப்பினர் (அமெரிக்கா) தங்கள் வாக்குறுதிகளை செயல்படுத்தாத நிலையில், ஈரான் மட்டும் தனது வாக்குறுதிகளின்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எங்கள் யுரேனியம் கையிருப்பு விரைவாக அதிகரிக்கும். இதை அவர்கள் (அமெரிக்கா) புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். அதே நேரத்தில் சர்வதேச அணுசக்தி முகமை, எங்கள் அணுசக்தி திட்டத்தை கண்காணிப்பதை நாங்கள் அனுமதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் செறிவூட்டிய யுரேனியம் கையிருப்பை அதிகரிக்கும் ஈரானின் அதிரடி நடவடிக்கை தங்களுக்கு வியப்பை தரவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், பாரீஸ் நகரில் கருத்து தெரிவிக்கையில், ஈரான் யுரேனியம் கையிருப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பது எனக்கு வியப்பு அளிக்கவில்லை. அவர்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி விட்டனர் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து