ஹாட்ரிக் ‘டக்’ அவுட் : ஸ்டூவர்ட் பிராடின் செல்லப்பிள்ளையான டேவிட் வார்னர்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      விளையாட்டு
david warner 2019 09 08

மான்செஸ்டர் : பால்டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு மீண்டும் வந்து ஆஷஸ் தொடரில் பல சாதனைகளை ஸ்டீவ் ஸ்மித் உடைத்து வரும் நிலையில் அதே விவகாரத்தில் சிக்கி மீண்டும் வந்த ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் தட்டுத் தடுமாறி வருகிறார்.

நடைபெற்று வரும் மான்செஸ்டர் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பிராட் வீசிய டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரின் 4-வது பந்தை ஆட வேண்டாம் என்று தாமதமாக முடிவெடுத்து மட்டையை விலக்குவதற்குள் எட்ஜ் ஆகி பேர்ஸ்டோ கையில் போய் உட்கார்ந்தது. வார்னர் டக் அவுட் ஆனார். தற்போது நேற்று முன்தினம் 2-வது இன்னிங்ஸில் 196 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இறங்கிய போதும் பிராட் பந்தை அவரால் சரியாக ஆட முடியவில்லை.

முதல் ஓவரின் 6-வது பந்தில் டேவிட் வார்னர் எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி ஸ்கோரரை தொந்தரவு செய்யாமல் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். இது இத்தனைக்கும் நேர் பந்து என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்த டெஸ்ட் போட்டியில் 'ஜோடி' என்று அழைக்கப்படும் இருமுறை டக் அவுட் ஆனதோடு கடந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ் டக் அவுட்டையும் சேர்த்து ஹாட்ரிக் டக் அவுட் ஆகியுள்ளார்.  அதுவும் 6-வது முறையாக இந்தத் தொடரில் பிராட் பவுலிங்கிலேயே விக்கெட்டைக் கொடுத்து அவரின் ‘செல்லப்பிள்ளை’ ஆனார் டேவிட் வார்னர். இந்தத் தொடரில் ஸ்டூவர்ட் பிராடின் 93 பந்துகளைச் சந்தித்த வார்னர் 80 டாட்பால்களுடன் 32 ரன்களை மட்டுமே எடுத்து 6 முறை அவுட் ஆகியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வார்னர், ஹாரிஸ், லபுஷேன் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுடன் தடுமாறி வருகிறது, ஆனால் 196 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலியா தற்போது 220 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் இங்கிலாந்தின் பெரிய தலைவலியாகத் திகழும் ஸ்டீவ் ஸ்மித் கிரீசில் நிற்கிறார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து